Posted on September 17, 2021
இணையேற்புக்குப் பிறகு தம்பதியர் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ள முக்கியமான குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.
இணையர் என்பது இரண்டு நபர்களை ஆயுள் முழுக்க இணைக்கும் அன்பு பந்தம். இந்த பயணத்தில் நிறைவான அன்பு, மகிழ்ச்சி, இனிமையான தருணங்கள், அரவணைப்பு, ஊடல், கொஞ்சல், குமுறல், சின்ன சின்ன கோபங்கள் என எல்லாமே இருக்க கூடும். இருக்கவும் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை எல்லாம் கலந்த கலவையாக கவலையில்லாமல் இருக்கும்.
இணையேற்புக்குப் பிறகு வாழும் காலம் மகிழ்ச்சியாக இருக்க தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் உங்களுக்காக சில ரகசிய குறிப்புகள். எல்லா வயதினருக்கும் ஏற்ற குறிப்புகள் உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும்.
இருவரும் முன்னரே அறிமுகமான காதலராக இருந்து கரம்பிடித்தாலும் இருவருமே மற்றவரது பலம் மற்றும் பலவீனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கலாம். அதனால் குறைபாடு தெரியகூடாது என்று மற்றவரிடம் மறைப்பது உங்களுக்குள் இடைவெளியை அதிகப்படுத்தி காட்டும்.
அதனால் இருவருமே தங்கள் மனதுக்குள் இருக்கும் குறைகளை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறையான இந்த செய்கைகள் உங்கள் துணையின் அன்பை அதிகமாக பெற்றுத்தரும்.
எல்லா பணிகளையும் ஒருவர் தான் செய்ய வேண்டும் என்று ஒருவர் மீதே திணிப்பது பல பிரச்சனைகளை உண்டு செய்யகூடும். சிறிய விஷயங்களை கூட மற்றவர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. காஃபி போட மனைவியும், காய் வாங்க கணவரும் என்பது அவசியமல்ல. வழக்கமாக ஒரு வேலையை ஒருவரே செய்யும் போது அவரது துணை முன்கூட்டியே செய்து அசத்துவது இருவருக்குமே மகிழ்ச்சியான பொழுதாக இருக்கும்.
சிறிய பிரச்சனைகளாக இருந்தாலும் அதை பேசி தீர்க்காமல் ஆறபோடுவது தம்பதியருக்கு எப்போதும் பிரச்சனை தான். இது மன அழுத்தத்தை உண்டாக்கும். நாள்பட்ட மன அழுத்தம் ஒரு கட்டத்தில் பெரிதாகும் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுதலிலேயே கழியும்.
இந்த நிலையில் இருவருமே அடுத்தவர் மீது பழிபோடுவதை காட்டிலும் தாங்கள் அந்த நேரத்தில் என்ன மாதிரியான செயலை செய்தோம் என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து அதை மாற்றிகொள்ள முயற்சிக்கவும்
ஒருவர் மற்றவரூக்கு அடிமையாக இருப்பது வாழ்க்கை முழுக்க மகிழ்ச்சியை உண்டாக்கும். அந்த அடிமை என்பது அன்பால் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பதை காட்டிலும் மரியாதையும் தேவை. எப்போதும் கனிவும் மென்மையும் உங்கள் வாழ்க்கையில் இனிமையான தருணங்களை அதிகரிக்க செய்யும்.
கிடைக்கும் சிறிய சந்தோஷங்களை துணையோடு கொண்டாடுங்கள். இது வாழ்க்கை முழுக்க நினைவுப்படுத்தி பார்க்க வேண்டிய மகிழ்வான தருணங்களாக இருக்கும். சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் இருக்க செய்யும்.
சிறிய கருத்துவேறுபாடாக இருந்தாலும் மற்றவர்கள் முன் வாதம் செய்வதையோ சச்சரவிடுவதையோ தவிர்க்க வேண்டும். இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கவும் வாய்ப்புண்டு. ஒருவரது தன்மான பிரச்சனையாகவும் இருக்கலாம். அதனால் இருவருக்கும் உண்டாகும் மனக்கசப்புகளை இருவருக்குமான நேரத்தில் பகிர்ந்துகொள்வது நல்லது.
அதே நேரம் ஒருவர் குறைகூற தொடங்கினாலும் துணையின் பதிலையும் பொறுமையாக கேட்பது பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்க உதவும். அதே போன்று துணையின் ஆர்வம், தொழில், அவர்களது எதிர்பார்ப்பு குறித்த விஷயங்களிலும் உறுதுணையாக இருங்கள். இது உங்கள் மீதான அன்பை வெளிப்படுத்துவதோடு அவர்கள் வெற்றிபெறவும் உறுதுணையாக இருக்கும்.ஏனெனில் நீங்கள் இருவரும் ஒருவரே. உங்கள் இருவரின் பிரச்சனைகளையும் நீங்கள் தான் தீர்க்க வேண்டும்.
பல தம்பதியரின் பிரச்சனைகளுக்கு காரணம் அவர்கள் சரிவர தங்களுக்கான நேரம் ஒதுக்காததே. உங்கள் இருவருக்குமாக ஒரு நேரம், குழந்தைகளுடன் செலவிட நேரம், பிரச்சனைகளின் தீர்வுக்கான நேரம் என ஒதுக்குவதன் மூலம் எப்போதும் உங்கள் உறவு குறித்த உற்சாகம் இருக்கும். இணையேற்புக்குப் பிந்தைய நாட்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வாழ்க்கை முழுக்க நன்றாக இருக்கும்.
பரிசு கொடுத்து அன்பை தெரிவிப்பது என்பது எப்போதுமே உறவில் மகிழ்ச்சியை அளிக்க செய்யும். கணவன் மனைவி இருவருக்குள்ளும் அந்நியோன்யம் அதிகரிக்க செய்யும். குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள், பெரியவர்கள், துணை என்று அனைவரையும் அன்பால் கட்டிப்போட சிறந்த வழி இந்த பரிசு தான். அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு பிடித்த பொம்மை, பிடித்த உணவு, துணைக்கு முத்தம் என்று எதுவாக இருந்தாலும் மனம் நிறைந்த பரிசு முக்கியம்.
முந்தானை முடிச்சு, தலையணை மந்திரம் என்பதெல்லாம் சும்மா வேடிக்கை பேச்சு அல்ல. மனதோடு இணைந்து துணையுடன் உறவுகொள்ளும் போது இருவருக்குமே நெருக்கம் அதிகரிக்க செய்யும். ஆதர்சன தம்பதியராக வாழ இந்த நெருக்கம் இருவருக்குமே அவசியம்.
எப்போதும் நெருக்கம் என்பது கடினமாக இருக்கலாம். அதனால் அவ்வபோது ஊடலும் சின்ன சண்டையும் வரலாம். இது அதிகரிக்காமல் பார்த்துகொள்வது அவசியம். பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்காமல் அதிக வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது தான் முக்கியம். அதே நேரம் சண்டையை நீண்ட நேரத்துக்கு கோவத்தை நீண்ட நாட்களுக்கு வளர்த்து கொள்ளவும் கூடாது.
இப்போது நீங்கள் தனி ஆள் கிடையாது. இருவரும் சேர்ந்து வாழும் உங்கள் வாழ்க்கையில் தன்னிச்சையான முடிவுகளுக்கு இடமளிக்காதீர்கள். சின்ன விஷயங்களாக இருந்தாலும் பெரிய விஷயங்களாக இருந்தாலும் அது இருவரின் கருத்துக்கும் உட்பட்டு எடுக்க வேண்டும். அப்போதுதான் மனதளவில் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையும் உண்டாகும்.
இரண்டு பேருக்கு நடுவில் நட்பும் குடும்பமும் அவசியம். குடும்ப விழாக்களை இருவருமே தவிர்க்க வேண்டாம். விழாக்கள் இல்லாத காலங்களிலும் நண்பர்களுக்கான விருந்து, குடும்பத்தில் விருந்து என்று இருந்தால் உங்கள் உறவு வட்டம் விரிவடையும். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சங்கடமான காலங்களிலும் மகிழ்ச்சியான காலங்களிலும் எல்லோரும் இருப்பார்கள்.